நாரை ஒன்று சிவபெருமானை வழிபட்ட தலமாதலால் இத்தலத்திற்கு 'திருநாரையூர்' என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயிலில் உள்ள பொள்ளாப்பிள்ளையார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். திருமுறையைத் தொகுத்து இவ்வுலகுக்கு அளித்த நம்பியாண்டார் நம்பிக்கு இவர்தான் அருள்புரிந்தார். முதலாம் இராஜராஜ சோழனுக்கு தேவாரம் இருக்கும் இடத்தைக் காண்பித்தவர் இந்தப் பிள்ளையார்தான். இவரது அருளால் சோழனும், நம்பியாண்டார் நம்பியும் சிதம்பரம் சென்று கறையான்களால் சூழப்பட்ட தேவாரப் பதிகங்களை மீட்டு சைவ உலகிற்கு அளித்தனர்.
மூலவர் சௌந்தரேஸ்வரர் என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். ஆவுடை பத்மத்தின் (தாமரையின்) மீது உள்ளது சிறப்பானது. அம்பிகை திரிபுரசுந்தரி என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள். அம்மன் சன்னதி வெளியே தனியாக உள்ளது.
இக்கோயிலில் உள்ள பொள்ளாப்பிள்ளையார் சன்னதியில் இராஜஇராஜசோழன் மற்றும் நம்பியாண்டார் நம்பி திருவுருவங்கள் இருக்கின்றன. அடுத்துள்ள சன்னதியில் சுப்ரமண்யர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகின்றார்.
பிரகாரத்தில் மகாலட்சுமி, நடராஜர், நவக்கிரகங்கள், சனீஸ்வரன் மற்றும் சூரியன் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் மூன்று பைரவர்கள் உள்ளனர்.
சூரியன் மற்றும் முனிவர்கள் இத்தலத்து இறைவனுக்கு பூஜை செய்துள்ளனர்.
திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|